பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஜி.கே வாசன் தலைமையில் போரட்டம்..!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணை தலைவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூசாக்கோ, சைதை மனோகரன், பாலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தாலே அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தலாம். மத்திய அரசு வரியை குறைத்தால்போதும் அல்லது தமிழக அரசு மற்ற மாநில அரசுகளை போன்று மதிப்பு கூட்டு வரியை குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும். அதை விடுத்து தமிழக மக்களை மத்திய, மாநில அரசுகள் ஊதாசீனப்படுத்தி வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே போனால் வரும் மாதங்களில் 100 ரூபாயை தாண்டும் அபாயம் வந்துவிடும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன். இந்த விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் காரணங்கள் கூறுவதை விட்டுவிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இந்த போராட்டம் அடித்தளமாக அமையும் என்று அவர் பேசினார்.
DINASUVADU