பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு…!தமிழக அரசு ரூ.6.78 வரை குறைக்கலாம்…!ஆதாரத்துடன் அறிக்கை விட்ட ராமதாஸ்
தமிழக அரசு நினைத்தால் பெட்ரோல் மீதான வரியை ரூ.6.78 காசுகளாக குறைக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசு தான் பெட்ரோல், டீசல் மீதான வரிகளால் மத்திய அரசை விட அதிக வருவாய் ஈட்டுகிறது.தற்போதைய நிலையில் 1 லிட்டர் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி முறையே ரூ.19.48, ரூ.15.33 காசுகள் மட்டும் தான்.
ஆனால் தமிழக அரசுக்கோ 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.36, 1 லிட்டர் டீசலுக்கு ரூ.15.45 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.29.54, 1 லிட்டர் டீசல் விற்கப்பட்டால் ரூ.21.92 வரியாக கிடைக்கிறது. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கும் நிலையில், எரிபொருட்களின் மீதான வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்.
இதனால் தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரூ.6.78 அளவுக்கும், டீசல் மீதான வரியை ரூ.4.97 அளவுக்கும் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.