கடந்தாண்டு தண்டையார்பேட்டையில் ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கில் ரவி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ரவியை குண்டர் தடுப்பு காவலில் ஒரு வருட சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல் புழல் சிறை அதிகாரிகளுக்கும் சென்றடைந்து விட்டது. ஆனால் அந்த கைதி ரவி சிறையில் இல்லை என்ற விவரம் அதிகாரிகள் கவனத்திற்கு நுண்ணறிவு பிரிவினர் மூலம் செல்ல, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
விசாரணையில் குண்டர் தடுப்பு காவல் உத்தரவு நகலை, கைதியை விடுவிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என தவறுதலாக கருதி அவரை அனுப்பிவிட்டதாக சிறை காவலர் பிரதீப் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் கைதியை விடுவிக்க சிறை காவலர் மட்டும் முடிவெடுத்திருக்க முடியாது என்பதால் இதில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து காவலர் பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியில் விடுவிக்கப்பட்ட கைதி ரவி தலைமறைவாகவிட்டதால் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.