புழல் சிறையில் குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்த சிறை காவலர்!
குண்டர் தடுப்பு காவலில் புழல் மத்திய சிறையில் வைக்கப்பட்ட கொலை வழக்கு கைதியை விடுவித்த விவகாரத்தில் சிறை காவலர் ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறைத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை அடுத்து புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்த சிறையில் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றவாளிகளுக்கு கஞ்சா சப்ளை, செல்போன் சப்ளை என சலுகை காட்டுவதற்கு லஞ்சம் வாங்குவதாக சிறைத் துறையினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்ப்பட்டிருந்த கைதியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு தண்டையார்பேட்டையில் ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கில் ரவி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ரவியை குண்டர் தடுப்பு காவலில் ஒரு வருட சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல் புழல் சிறை அதிகாரிகளுக்கும் சென்றடைந்து விட்டது. ஆனால் அந்த கைதி ரவி சிறையில் இல்லை என்ற விவரம் அதிகாரிகள் கவனத்திற்கு நுண்ணறிவு பிரிவினர் மூலம் செல்ல, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
விசாரணையில் குண்டர் தடுப்பு காவல் உத்தரவு நகலை, கைதியை விடுவிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என தவறுதலாக கருதி அவரை அனுப்பிவிட்டதாக சிறை காவலர் பிரதீப் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் கைதியை விடுவிக்க சிறை காவலர் மட்டும் முடிவெடுத்திருக்க முடியாது என்பதால் இதில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து காவலர் பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியில் விடுவிக்கப்பட்ட கைதி ரவி தலைமறைவாகவிட்டதால் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.