புயல் பாதிப்பால் உலக மீனவர் தினத்தை புறக்கணித்த குமரி மீனவ மக்கள்
கஜா புயல் கோரத் தாண்டவமாடி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சீர்குலைய செய்துள்ளது. புயல் பாதிப்பால் குமரி மாவட்ட மீனவர்கள் உலக மீனவர் தினத்தை புறக்கணித்துள்ளனர்.
உலக மீனவர் தினம்… மீனவர்களின் சிறப்புமிக்க விழாக்களில் மிக முக்கியமானது. கடல் அன்னையை நம்பி வாழும் மீனவர்கள், கடலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் சிறப்பான விழா இது. உலக மீனவர் தினத்தன்று மீனவர்கள் அனைவரும், புத்தாடை அணிந்து, நாள் முழுவதும் படகில் ஏறி கடலில் பயணித்தவாறு குடும்பத்துடன் உணவு உண்டு மகிழ்வர்.
முக்கியத்துவம் வாய்ந்த உலக மீனவர் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 21-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு குமரி மாவட்டத்தை சேர்ந்த 47 மீனவ கிராம மக்கள், மீனவ தினத்தை கொண்டாடப்போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அனைத்தும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதையடுத்து, தங்களது கொண்டாட்டத்தை மீனவர்கள் தவிர்த்துள்ளது மனித நேயத்தின் உச்சம். மீண்டுவர முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ள டெல்டா மக்கள், விரைவில் மீண்டுவர இயற்கையை வேண்டுவதாக மீனவ மக்கள் கூறியுள்ளனர்.
dinasuvadu.com