புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் அதிமுக பிரமுகர் சந்துருஜி..!
புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் அதிமுக பிரமுகர் சந்துருஜியை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகளை முடக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பலரது வங்கிக் கணக்கில் இருந்து சமீபகாலமாக பல கோடி பணம் மாயமானது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், சந்துருஜியை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்துள்ளது. அவரது புகைப்படத்துடன், அவரது விவரம் அடங்கிய நோட்டீஸ் புதுச்சேரி, தமிழக காவல்நிலையங்களில் ஒட்டப்பட்டது. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுவை சிபிசிஐடி போலீஸுக்கு தெரிவிக்குமாறு கூறப்பட்டது.
இதனையடுத்து இன்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில், கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும் கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் சந்துருஜியை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்துருஜியுடன் கட்சியைச் சார்ந்தவர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கட்சியின் தலைமை நிலையச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.