புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

Default Image
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது கோரத்தாண்டவம் ஆடியது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சரிந்து விழுந்தன. புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, அரிமளம் உள்பட பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் பொதுமக்களே சரிந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.
திருச்சி, சிவகங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தீயணைப்பு துறையினர் 300 பேர் வந்து, பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் மின்கம்பங்கள் சேதத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சேதமடைந்த மின்கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக உடனடியாக புதியவை பொருத்த முடியாததால் மின்சாரம் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது.
 குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க நினைத்தாலும் உரிய தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் ஜெனரேட்டர் மூலம் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. அங்கு பெண்கள் குடங்களுடன் திரண்டு சென்று தண்ணீர் பிடித்து செல்கிறார்கள்.
புயல் பாதிப்பு மீட்பு பணி இன்று 3-வது நாளாக நடந்த நிலையில், முழுமையாக முடிவடைய இன்னும் 6 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்