பிளஸ்1 சேர்க்கையில் தவறுகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை பாடவாரியாக இடஒதுக்கீடு!
பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோ,பிளஸ்1 சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கைக்காக விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன. பொதுவாக பிளஸ்1 வகுப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளான முதல், 2வது மற்றும் மூன்றாவது குரூப்களில் சேருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அந்த மூன்று குரூப்களிலும் சேர கடும் போட்டி நிலவுகிறது. இது மாணவர் சேர்க்கையில் குளறுபடிகளை ஏற்படுத்துவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுகிறது.
மேலும், மாணவர் விரும்பும் குரூப்களில் சேர அவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இத்தகைய தவறுகளை களைய பிளஸ்1 வகுப்பில் குரூப்களில் சேர பாடவாரியாக இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோ உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மாணவர் சேர்க்கையின்போது, இடஒதுக்கீட்டு விதிகளை பாடப்பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டும். இதில் எந்த தவறுகளும், புகார்களும் இருக்கக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.