பிளஸ் 2 விடைத்தாளில் 6 பக்கத்தை திருத்தாமல் விட்ட ஆசிரியர் !அதிகாரிகள் விசாரணை..!

Default Image

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சோனாபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் திவ்யா (வயது 17) . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் பிரிவு படித்தார்.

பிளஸ் 2 தேர்வை ஆர்வமுடன் எழுதியிருந்த திவ்யா கணக்குப்பதிவியல் பாடத்தில் தனக்கு அதிகமார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் 200-க்கு 124 மதிப்பெண்களே அவருக்கு கிடைத்தது.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து பார்க்கும் வசதி உள்ளது என்பதால் திவ்யா டவுன் லோடு செய்து பார்த்தார். அப்போது தான் எழுதிய விடைத்தாளில் 6 பக்கங்கள் விடைத்தாள் திருத்திய ஆசிரியரால் திருத்தாமல் விடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து திருச்சி மண்டல அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அங்கு ஊழியர்கள் பிளஸ் 2 விடைத்தேர்வு மறு மதிப்பீட்டிற்கான கால அவகாசம் 6-ந்தேதியோடு முடிந்து விட்டதால் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முறையிட கூறினர்.

 

இதனால் திவ்யா மன உளைச்சல் அடைந்துள்ளார். திருத்தாமல் விடுபட்ட 6 பக்கங்களில் அவருக்கு 60 மதிப் பெண்கள் வரை கிடைக்கும். மேலும் தேர்வுத்தாளில் 12 மதிப் பெண்கள் கொண்ட கேள்விக்கு சரியான விடை அளித்திருந்தும் அதற்கு விடைத்தாள் திருத்திய ஆசிரியர் 6 மதிப்பெண்கள் மட்டுமே அளித்திருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது மதிப்பெண் குறைந்திருப்பதால் உயர் கல்வி வாய்ப்பில் திவ்யாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு மாணவி ஹர்ஷினி என்பவரின் கணிதப்பாட விடைத்தாளில் 6 மதிப்பெண் வினாவிற்கான விடை திருத்தப்படாமலேயே அருகில் 0 போடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவல் பரவியதால் மற்ற மாணவ, மாணவிகளும் தங்களுக்கு உரிய மதிப்பெண்கள் குறைந்ததற்கும் விடைத்தாள் சரியாக திருத்தப்படாதது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மற்ற மாணவ, மாணவிகளும் விடைத்தாள் நகல்களை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே மாணவி திவ்யா, மற்றும் ஹர்ஷினியின் விடைத்தாள்கள் எந்த விடைத்தாள் திருத்தும் தேர்வு மையத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அவற்றை திருத்திய பள்ளி ஆசிரியர்கள் யார்? என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விடைத்தாளில் உள்ள ஆசிரியர்களின் கையெழுத்து மூலம் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்