தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மே மாதத்தில் இருந்தே விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், பிளஸ் 1 பாடப் புத்தகங்களின் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் பெற்றோர் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். டிபிஐ வளாக விற்பனை கவுன்ட்டரில் முதல் நாளில் 1,650 பேர் பிளஸ் 1 புத்தகங்களை வாங்கியுள்ளனர். இந் நிலையில், 2-வது நாளான நேற்றும் டிபிஐ வளாகத்தில் பிளஸ் 1 புத்தகம் வாங்க பெற்றோர் கூட்டம் அலை மோதியது. பிளஸ் 2 புத்தக விற்பனை கவுன்ட்டரிலும் பிளஸ் 1 புத்தகங்களே விற்பனை செய்யப்பட்டன.