ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து திமுகவின் தனிப்பட்ட கருத்து என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களின் உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற வகையில் மத்திய அரசு கணினி பயன்பாடுகளை கண்காணிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது.மக்களின் உரிமை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கிறது மத்திய அரசின் இந்த நடவடிக்கை என்று குற்றம் சாட்டிய அவர் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
பாதிப்புக்கு நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடியை கேட்டது மாநில அரசு ஆனால் இது குறித்து மத்திய அரசு உதவ முன்வரவில்லை ஆனால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகின்ற பிரதமர் மோடி கடுமையாக மக்கள் கஜா புயல் பாதிப்பை பார்வையிட ஏன் இங்கு வரவில்லை. மேலும் ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு எந்தவித நிபந்தனை இல்லாமல் ஆதரவு அளித்து வருகிறது.
ஆளுகின்ற அரசால் தமிழகத்துக்கு போதிய நிதியை பெற்றுத்தர முடியவில்லை. தமிழகத்தின் எந்த உரிமைகளையும் பாதுகாக்க முடியவில்லை. மோடி கர்ஜித்த கருப்புப் பணம் மீட்பு மற்றும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்று அறிவித்த எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
ஆகையால் தற்போது உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டை விட்டு அகற்றப்பட வேண்டும்.அதற்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டுமானால் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.