பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரிக்கை மனு …!
பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை தனது தீர்ப்பில் கூறப்பட்ட மாற்றங்களுடன் செயல்படுத்த 6 வாரங்களில் திட்டம் வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக, கடந்த 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது உச்சநீதிமன்ற உத்தரவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகிவிட்டது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் அடுத்த பாசனப் பருவத்திற்கான விவசாயப் பணிகளை தொடங்கும் வகையில், மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என, பாசனத்திற்கு காவிரி நீரைச் சார்ந்துள்ள தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அனைத்து அதிகாரங்களுடன் அமைக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் கோரிக்கை மனுவில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.