பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

Default Image
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்கள், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டும், இந்தியாவுக்கு திரும்புவதற்கு அனுமதி தரப்படாத நிலையிலும் அங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அவர்களில் 8 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தையும், 7 பேர் திருநெல்வேலி மாவட்டத்தையும், 6 பேர் தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் அங்கு மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களாகும்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த உரிமையாளர்கள் முகமது சல்லா மற்றும் அவரது சகோதரர்களின் 3 படகுகள் மூலம் கடந்த 6 மாதங்களாக மீன்பிடித்து வந்தனர்.
ஆனால் கடந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு உரிய பங்கை ஈரான் உரிமையாளர்கள் சமீபகாலமாக கொடுக்கவில்லை. எனவே இவர்களால் தங்களின் வாழ்க்கைக்கான தேவைகளை சந்திக்க முடியவில்லை. ஊரில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பணம் அனுப்ப இயலவில்லை.
முதலாளிகள் நியாயமான தொகையை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை மீனவர்கள் இழந்துவிட்டனர். எனவே சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியும், அதற்கான அனுமதியை உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.
மீனவர்களுக்கு வேலையும் வழங்காமல், சம்பளமும் தராமல் அவர்களின் பாஸ்போர்ட்டையும் உரிமையாளர்கள் முடக்கி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மீனவர்களுக்கு அளித்திருந்த தங்குமிடத்தில் இருந்தும் அவர்களை உரிமையாளர்கள் துரத்திவிட்டனர். எனவே உணவு, தங்குமிடம், பாதுகாப்பு இல்லாமல் 21 மீனவர்களும் தெருவில் நிற்கின்றனர்.
எனவே 21 மீனவர்களும் உடனே நாடு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். அந்த மீனவர்களின் பாக்கித்தொகை அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்