பள்ளிக்குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட ஆய்வை வெறும் சம்பிரதாய விழாவாக நடத்த நினைக்கிறீர்களா? மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் காட்டம்..!
திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது ஏன் என்று? வட்டார போக்குவரத்து அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள், வியாழக்கிழமை நடைபெற்றது.
கருமண்டபம் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் நடந்த பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணிகளை ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, ஆய்வு முடிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்த ஆட்சியர், அதில் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாததைக் கண்டு அதிருப்தியடைந்தார்.
வாகனங்களின் சகல விவரங்களையும் குறிப்பிடாதது ஏன் ? என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆட்சியர் ராசாமணி, பெயரளவுக்கு ஆய்வு நடத்த நினைக்கிறீர்களா என ஆவேசப்பட்டார் அதற்கு பதில் அளிக்க முடியாமல் திருச்சி மேற்கு பகுதியின் பொறுப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் உமாசக்தி வாயடைத்து போனார்..!
முதன்மை கல்வி அலுவலருக்கும் ஆட்சியரின் அர்ச்சனை கிடைத்தன. பள்ளிக்குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட ஆய்வை வெறும் சம்பிரதாய விழாவாக நடத்த நினைக்கிறீர்களா ? என்றும், பள்ளிகள் திறக்க சொற்ப தினங்களே உள்ள நிலையில், வாகனங்களை ஆய்வு செய்ய ஏன் சுணக்கம் காட்டியது ஏன்? எனவும் ஆட்சியர் ராசாமணி கடிந்து கொண்டார்.
அதிகாரிகள் ஏதோ சொல்லி சமாளித்ததை ஏற்காத ஆட்சியர், இப்படி பொறுப்பற்ற நிகழ்ச்சியாக இருக்கும் என முன்னரே தெரிந்திருந்தால், நிகழ்ச்சிக்கே வந்திருக்க மாட்டேன் என கோபப்பட்டார். அதிகாரிகளின் அலட்சியத்தை ஏற்க மறுத்த ஆட்சியர் ராசாமணி, நிகழ்ச்சி முழுவதும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.