பல்வேறு இடங்களில் தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை!
மிதமானது முதல் கனமானது வரையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்,மழைப் பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இதேபோன்று, சத்தியமங்கலத்தில், கனமழை கொட்டித்தீர்த்தது..
கோயம்புத்தூரில், நேற்றிரவு பெய்த பரவலான கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இரவு மாநகரின் பல இடங்களிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது .அதனால் பல இடங்களிலும் மின்வெட்டு ஏற்பட்ட சூழலில் திடீரென மழை பெய்தது ரயில்நிலையம், காந்திபுரம், கணபதி, வடகோவை, கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. அழையா விருந்தாளியாய் வந்த ஆலங்கட்டி மழையின்போது விழுந்த ஐஸ்கட்டிகளை ஏராளமானோர் எடுத்துப் பார்த்து மகிழ்ந்தனர்.
தஞ்சாவூரில், நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. பயங்கர இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் அப்போது நிலவியது.
கரூரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்த நிலையில், நேற்று மாலை கனமழை கொட்டியது. அவ்வப்போது, இடைவெளிகளுடன், மிதமான மழை பதிவானது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.