பரணி, மகா தீபத்தின் போது செல்போனுக்கு தடை…அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய கட்டுப்பாடு…!!
பரணி மற்றும் மகா தீபத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை தீபத் திருவிழா மிக முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
விழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் உள்ள 9 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் திருக்கல்யாண மண்டபம் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது
தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி கூறியதாவது:-
மகா தீபத்தன்று திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.இந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக 8 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 34 இடங்களில் போலீஸ் உதவி மையமும், 45 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளது. கோவிலில் 103 இடங்களிலும், நகரில் 53 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச்சீட்டு (பாஸ்) பார் கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி 2 ஆயிரம் பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதிச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com