பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகை..!
பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செங்கோட்டை, ரெகுராமபுரம், வெளவால்தொத்தி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.
இக்கிராம விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால் விளைச்சல் இன்றி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு 178 விவசாயிகளுக்கு ரூ. 44 லட்சத்து 55 ஆயிரத்து 570 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில் பயனாளிகள் பட்டியலில் 77 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையானது சரியான பெயர் மற்றும் முகவரிக்கும், 101 விவசாயிகளுக்கு பெயரும், முகவரியும் வெவ்வேறாக தவறுதலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு அளிக்கப்பட்டிருப்பதால் இழப்பீட்டு தொகையை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து ரெகுராமபுரம் கூட்டுறவு வங்கி தரப்பிலிருந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தவறுகளை களைந்து சரியான பட்டியல் அளிக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இதுநாள் வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து திருத்தப்பட்ட பெயர் பட்டியல் அனுப்பப்படாததால் 101 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை விடுவிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நாள்தோறும் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேரிடுவதால் விவசாயிகளுக்கும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ரெகுராமபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு குளறுபடிகளை நிவர்த்தி செய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
இதில் விவசாயிகள் வரதராஜன், மருதுபாண்டி, ராஜாமணி, முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்