பத்திரிக்கையாளர்கள் சேகர்ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் !அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு மன்னிப்பு ….
“டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சேகர்ரெட்டியிடம் இருந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பலர் பணம் பெற்றதற்கான பட்டியலை அதிமுக தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு பத்திரிகை ஆளுமைகள் பணம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கும் ரங்கராஜ் பாண்டேவும்,புதிய தலைமுறை தலைமை செய்தி அதிகாரி கார்த்திகை செல்வனும் லஞ்சம் பெற்றதாக இணையத்தில் தகவல் வெளியாகின.
இதற்கிடையே இந்தப் பட்டியல் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அதிமுகவின் ஐ.டி. பிரிவு செயலாளர் பிரசாந்திடம் தொலைபேசி மூலம் விளக்கம் கோரியது. அப்போது பேசிய பிரசாந்த், ” பத்திரிகையாளரின் பெயர் கொண்ட பட்டியல் முழுக்க முழுக்கத் தவறானது என்றும், சரிபார்க்காமல் அதிமுக தொழில்நுட்பப்பிரிவு இணையதளத்தில் பகிர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தச் செயலுக்கு வருந்துவதாகவும் பிரசாந்த் தெரிவித்தார்.பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் இருந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பணம் பெற்றதாக வெளியான பட்டியல் தவறானது என்று அதிமுக ஐ.டி.பிரிவு மன்னிப்புக் கோரியுள்ளது.