பசுமைவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு – எடப்பாடி பழனிசாமி..!

சென்னைக்கும் சேலம் மாவட்டத்துக்கும் இடையே பசுமைவழிச் சாலை அமைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அப்பகுதி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்காக 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், இதனால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், எத்தனையோ சாலை பணிகள் நிலுவையில் இருக்க பசுமை சாலைக்கு மட்டும் அதிமுக அரசு அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பசுமை  சாலை அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பின்பு அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கோப்புப்படம்

எதிர்க்கட்சி தலைவரின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் சென்னை இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டம் மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்ற திட்டம் என்றும், கடும் போராட்டத்துக்கு பிறகு பெறப்பட்ட திட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், மத்திய அரசு இந்த திட்டத்துக்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வளவு பெரிய நிதி மாநில அரசிடம் இல்லை என்பதால் மத்திய அரசிடமும், உலக வங்கியிடம் இருந்தும் அந்த நிதியை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த வழித்தடத்தில் மலைப்பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் சுரங்க வழி சாலைகளாகவே இருக்கும் எனவும், இந்த பசுமைவழிச் சாலைக்காக குறைவான அளவிலேயே மரங்கள் வெட்டப்படுவதாகவும் விடையளித்தார்.

மேலும், மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை அதிக அளவில் வழங்கப்படும் எனவும் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்