பகலில் ஒரு வேஷம்!இரவில் ஒரு வேஷம்!புத்திசாலித்தனமான கொள்ளையர்கள் கைது!
பகலில் ஆட்டோ ஓட்டுனர்களாகவும் இரவில் வாகனங்களை திருடியும்,வழிபறியிலும் ஈடுபட்டு வந்த 4 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் 6 வது அவென்யூவில் அதிகாலை பாண்டியன் என்பவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். அப்போது பாண்டியன் கூச்சலிட்டதும், அருகில் உள்ள பொதுமக்கள் தப்பி செல்ல முயன்ற நான்கு பேரையும் பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நான்கு பேரிடம் விசாரணை செய்த போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
பிடிப்பட்ட தினேஷ்குமார்,பிரசாந்த்,கார்த்திகேயன், தினேஷ் ஆகிய நான்கு பேரும் பெரம்பூர் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் எனத் தெரியவந்துள்ளது. இரவில் 4 பேரும் சேர்ந்து கால் டாக்சி ஒன்றை திருடி வைத்து கொண்டு, அதன் மூலம் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் வழிப்பறி, வாகன திருட்டு சம்பவங்கில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். கொள்ளையர்களில் ஒருவன் கால் டாக்சி டிரைவர் போன்றும், மற்றவர்கள் பயணிகள் போன்றும் சென்னை அண்ணா நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் நோட்டமிட்டு சாலையோரமாக நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை திருடுவது, தனியாக யாரும் நடந்து சென்றால் அவர்களை கத்தியை காண்பித்து மிரட்டி வழிப்பறி செய்வது என தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரவில் வலம் வருவதற்காக பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பகல் முழுவதும் ஷேர் ஆட்டோ ஓட்டி பணம் சம்பாதித்தாலும், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 4 பேரும் குறுக்கு வழியில் இறங்கி இறுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.