நேற்றிரவு ரமலான் நோன்பிற்கான பிறை தென்பட்டது! அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை
இன்று இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இஸ்லாமிய மாதங்களில் ரமலான் மாதத்தில்தான் புனித நூலான குர் ஆனின் வசனங்கள் இறைவன் மூலம் கிடைக்கப்பெற்றதாக நம்பப்படுகிறது. எனவே அந்த மாதத்தை நோன்பு மாதமாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், செல்வந்தர்களும் பசியின் தீவிரத்தையும், உணவு கிடைக்காதவர்களின் நிலையையும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிக்கின்றனர்.
நாள் முழுவதும் நோன்பிருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் கஞ்சி மற்றும் பழச்சாறு அருந்தி நோன்பை முடித்துக் கொள்வது வழக்கம். இந்த நோன்புக் காலத்தின் போது, ஸக்காத் எனப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கிடவேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ரமலான் நோன்பிற்கான பிறை நேற்றிரவு தென்பட்டதால், இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்றிரவு முதல் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகையும் நடத்தப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.