நெல்லையில் இராமநதி அணையை தூர்வாரக் கோரிக்கை !
நெல்லை மாவட்டத்தில் உள்ள இராமநதி அணையை தூர்வாராமல், மேல்மட்ட கால்வாய் அமைத்தால் விவசாய நிலங்கள் மற்றும் சுமார் 1 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இராமநதி அணை. 96 ஏக்கர் பரப்பளவில் 84 அடி கொண்டு 152 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த அணையின் மூலம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கடையம், தெற்குகடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர் உட்பட சுமார் 15 கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெளத்தின் போதும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினாலும் அடித்து வரப்பட்ட பாறாங்கற்கள், மரக்கட்டைகள், மணல் மற்றும் சகதியால் சுமார் 30 அடி வரை நிரப்பப்பட்டு தற்பொழுது 54 அடி அளவிற்குதான் தண்ணீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்த அணையை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. 34 குளங்கள், சுமார் 1 லட்சத்திற்கும் மேலான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அணை, தற்பொழுது தூர்வாரப்படாததால் அதிகமான தண்ணீர் சேமிக்க முடியாமல் மூன்று போகம் விளைந்த விவசாயம் தற்போது ஒருபோகம் விளைச்சலே உள்ளது என விவாசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த அணையின் வடபக்கம் கடவக்காடு என்ற இடத்தில் இருந்து மேல்மட்ட கால்வாய் அமைத்து தென்காசி தாலுகா பாவூர்சத்திரம், கீழப்பாவூர் சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய ஆரம்பக்கட்டப்பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில் இந்த அணையை நேரடியாக நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அணையை தூர்வாரி அதன் முழுகொள்ளளவான 84 அடி ஆழத்தை உறுதி செய்தபின், மேல்மட்ட கால்வாய் அமைத்து பிறப்பகுதிகளுக்கு தண்ணீர் விட எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் அப்படி செய்யாமல் மேல்மட்ட கால்வாய் அமைத்தால் விவசாயம் அழிவதோடு கடையம் ஒன்றிய பகுதிமக்கள் குடிநீர் தேவைக்கே திண்டாடும் அவலநிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிகின்றனர்.