நீலகிரி: தோடர் இன மக்களின் கோயிலில் கூரை மாற்றும் திருவிழா நடந்தது..!!
தோடர் இன மக்களின் கோயிலில் கூரை மாற்றும் திருவிழா நேற்று ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து பகுதியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் உட்பட பல்வேறு வகையான ஆதிவாசி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசித்து வருகின்றனர். தோடர் இன மக்களின் தலைமை மந்தாக முத்தநாடு மந்து உள்ளது.
இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து பகுதியில் தோடர் மக்கள் புதிதாக கோயில் கட்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு புதிதாக கூரை வேயும் நிகழ்ச்சி நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் கிடைக்க கூடிய மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு வரப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த தோடர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து வழக்கமான உற்சாகத்துடன் கோயிலில் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் புற்கள் கொண்டு கூரை வேய்ந்தனர். இதில் பல்வேறு மந்துகளில் இருந்து ஏராளமான தோடர் இன மக்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்