நீர் இருப்பு மேட்டூர் அணையை திறக்கும் அளவுக்கு இல்லை!உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
கூட்டுறவுத்துறை சார்பில் திருவாரூரில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் இன்று திறக்கப்பட்டது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை. அதேநேரத்தில் கர்நாடக மாநிலத்தில் மழை காரணாக கபினி அணை திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்மட்டத்தின் உயர்வை பொறுத்து மேட்டூர் அணை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் பேச உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வெளிநடப்பு என்ற நாடகத்தை நடத்துகின்றனர். இது மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாததால் பணிகள் தொய்வடையவில்லை. வங்கி செயலாளர்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
மேலும் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.115 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்திருப்பதின் மூலம் குறுவை சாகுபடி காவிரி டெல்டாவில் சிறப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.