நீட் தேர்வில் பிழைகள் இருந்த 49 வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் கோரும் வழக்கு நாளை ஒத்திவைப்பு!
நீட் தேர்வில் பிழைகள் இருந்த 49 வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் கோரும் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வரும் நிலையில் அந்நிறுவனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில், 180 வினாக்கள் கொண்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணமாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 75வது வினாவில்
சிலீமீமீtணீலீ (தமிழில் சிறுத்தை) என்ற வார்த்தைக்கு பதிலாக சீதா என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதே போல 77வது வினாவில் வரும் ஒரு ஆங்கில வார்த்தையும் தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இதே போல 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் கொடுக்கப்பட்டிருப்பதால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 49 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர்களே விளக்கியும் உள்ளனர். அதாவது, என்சிஇஆர்டி புத்தகங்கள் தமிழில் இல்லாததும், ஆங்கிலத்தின் மிக நுணுக்கமான வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் தவறியதுமே காரணம் என தெரிவித்துள்ளனர். இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது என்று இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் பங்கேற்ற 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழில் நீட் தேர்வெழுதியது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.