நிர்மலாதேவி குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்!
பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சிபிசிஐடியின் கோரிக்கையை ஏற்று நிர்மலாதேவியின் குரல்மாதிரியைப் பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்படி, நிர்மலாதேவியை இன்று காலை 10 மணி அளவில் மதுரை மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் நாளை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பின்னர், 29 ஆம் தேதி மீண்டும் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
27 மற்றும் 28ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இரவும், புழல் சிறையில் மூன்றாவது எண் அறையில் நிர்மலா தேவி அடைத்து வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.