நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது…!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் எம்.எல்.ஏவாக இருந்தபோது தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தாக கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டையில் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்தபோது புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த மேம்பாலப் பணிகள் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுத்ததற்காக விஜகாந்திற்கு அவரது கட்சியினர் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாகக் குற்றம்சாட்டினார்.
தான் எம்.எல்.ஏவாக இருந்தபோது தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்கு அதிமுக அரசிடமிருந்து ஒத்துழைப்பு பெற சிரமப்பட்டதாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகமாடுவதாகக் குற்றம்சாட்டினார்.