நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு..,
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோட்டார் சமூக சேவை இயக்கம் சார்பில் இயங்கும் சைல்டு லைன் 1098 அமைப்பு சார்பில், நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் மற்றும் குழந்தைகள் பங்கேற்று கையெழுத்திட்டனர். அவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டன. வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும் போதும், பள்ளி மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் போதும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் கடத்தல், சித்ரவதை, குழந்தை தொழிலாளர்கள் குறித்து சைல்டு லைன் தொலைபேசி எண்ணான 1098க்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
கடத்தல் தொழில் செய்வதற்கும், பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காகவும், கொத்தடிமைகளாக வேலை செய்வதற்கும், பிச்சை எடுப்பதற்கும், உடல் உறுப்புகளை திருட்டு தனமாக எடுப்பதற்கும் குழந்தைகளை கடத்துகிறார்கள். குழந்தைகள் காணாமல் போவது குறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.