நாகர்கோவிலில் ஷோரூம் கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை..!

Default Image

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பிரபல செல்போன் நிறுவனம் ஒன்றின் செல்போன்கள் விற்பனை செய்யும் ஷோரூமை நடத்தி வருகிறார். அதில் ரூ.6500 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விலைகொண்ட ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் இரவு சுதாகர் வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் திறக்க வந்தபோது ஷோரூமின் முன்பக்க ஷட்டர் கதவானது, இரும்பு கம்பியால் நெம்பி உடைத்து திறந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் ஷட்டரை திறந்து பார்த்தபோது ஷோரூமில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

நள்ளிரவு நேரத்திலோ, அதிகாலை நேரத்திலோ ஷோரூம் கதவை உடைத்து நுழைந்த மர்ம ஆசாமிகள் செல்போன்கள் இருந்த அட்டைப்பெட்டிகளை திறந்து, அதற்குள் இருந்த செல்போன்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அட்டைப்பெட்டிகளை கடைக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் வெற்று அட்டைப்பெட்டிகள் அனைத்தும் அந்த ஷோரூமில் பரவிக்கிடந்தன.

இதுகுறித்து சுதாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளை போன செல்போன்களின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும் என்று கடையின் உரிமையாளர் சுதாகர் தெரிவித்தார்.

இதேபோல் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பாத்திரக்கடை ஒன்றிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (59). இவர் செட்டிகுளம் சந்திப்பு அருகே பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஜெயபாண்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் இரும்புக்கம்பியால் நெம்பப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது.

உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கோட்டார் போலீசார் அங்கு சென்று கடையை திறந்து பார்த்தனர். கடையில் பாத்திரங்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. ஆனால் கடையில் இருந்த மேஜை டிராயரின் பூட்டை உடைத்து அதற்குள் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கடையிலும் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

ஒரே நாள் இரவில் ஒரே பகுதியில் உள்ள 2 கடைகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை நடந்த பாத்திரக்கடைக்கு எதிரே உள்ள ஓட்டல் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது 6 பேர் கொண்ட வடமாநில கும்பல் பூட்டப்பட்டிருந்த பாத்திரக்கடையின் வெளியே வரிசையாக உட்கார்ந்திருப்பதைப்போன்ற காட்சியும், ஒருவர் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த காட்சியும் பதிவாகி இருந்தது. அவர்கள் தான் பாத்திரக்கடையிலும், செல்போன் கடையிலும் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

இதேபோல் செல்போன் ஷோரூமுக்கு எதிரே உள்ள வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் கொள்ளையர்களின் உருவங்கள் தென்படுகிறதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்