நாகர்கோவிலில் மாணவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது விழாவில் கலெக்டர் வேண்டுகோள்..!
தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவுக்கு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் திருவம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே சாலை பாதுகாப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
சாலைகளில் பயணம் செய்யும்போது விழிப்போடு செல்ல வேண்டும். கல்லூரி மாணவ- மாணவிகள் வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது, வாகனங்களில் செல்லும் போது நாம் மட்டுமல்ல, சாலையில் நடந்து செல்வோரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவதும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதும் அவசியமாகும். அது நமக்கு பாதுகாப்பைத் தரும்.
முன்னதாக அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும் யோகா மற்றும் முதலுதவி குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் சாலை பாதுகாப்பு குறித்து படக்காட்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முடிவில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி நன்றி கூறினார். இதில் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், டிரைவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.