நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் பேரணியில் பங்கேற்ற 140 பேர் மீது வழக்கு..!
மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி நேற்று நாகர்கோவிலில் பாரதிய ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் அவரும் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.
இந்த பேரணி நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் திரளான பாரதிய ஜனதா கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டதாக வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் வடசேரி போலீசில் புகார் செய்தார்.
இதைதொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட இளைஞரணி தலைவர் நீலேஷ்ராம், பாரதிய ஜனதா நகரத்தலைவர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் உள்பட 140 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 143, 188 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.