நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? சட்டசபையில் விவாதம் – தி.மு.க. வெளிநடப்பு..!

Default Image

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நடிகர் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்: முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சபாநாயகர்: நான் அரசிடம் இதுபற்றி விசாரித்தேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 20-ந்தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க வேண்டாம்.

ஸ்டாலின்: எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.

சபாநாயகர்: இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாதது அல்ல. நீதிமன்ற நடவடிக்கையில் இருப்பதை நாம் இங்கு விவாதிப்பது சரியாக இருக்காது.

ஸ்டாலின்: நீதிமன்ற நடவடிக்கை பற்றி நான் பேச விரும்பவில்லை, அதற்குள் போக விரும்பவில்லை. காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறேன்.

சபாநாயகர்: நீதிமன்றத்திற்கு 20-ந்தேதி வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாலின்: ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸ் ஏன் நிறைவேற்றவில்லை.

சபாநாயகர்: நீங்கள் திரும்ப திரும்ப இதுபற்றி விவாதித்து வருகிறீர்கள். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அவையில் இதை விவாதிப்பது சரியாக இருக்காது. 20-ந்தேதி வரை பொறுத்திருந்து அதன்பிறகு இதுபற்றி பேசலாம்.

ஸ்டாலின்: போலீஸ் ஏன் அவரை கைது செய்யவில்லை என்பதைத்தான் கேட்கிறேன்.

(சபாநாயகர் தொடர்ந்து அவருக்கு பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை ஸ்டாலின் உட்கார வைத்தார்).

சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தில் நீதிமன்றம் உத்தரவு கொடுக்கவில்லை என்றால் உங்களை பேச அனுமதித்து இருப்பேன்.

ஸ்டாலின்:- இந்த வழக்கு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. ஏன் அவரை இதுவரை கைது செய்யவில்லை. அவரை போலீஸ் கைது செய்யாததால்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சபாநாயகர்:- இந்த வி‌ஷயத்தை இங்கு இப்போது பேச அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகிவிடுவோம். வேறு வி‌ஷயம் இருந்தால் பேசுங்கள் அனுமதிக்கிறேன். இந்த வி‌ஷயம் குறித்து விவாதிக்க வேண்டாம்.

சபாநாயகர் பேச அனுமதி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து தி.மு.க.வினரும் வெளிநடப்பு செய்தனர்.

இந்த விவாதம் நடந்து கொண்டு இருந்தபோதும், தி.மு.க. வெளிநடப்பு செய்த போதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் இருந்து விவாதங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய பெண் ஊழியர்களை தரங்கெட்ட வகையில் சில விமர்சனங்களை செய்திருக்கிறார். அதை முகநூலில் அவருடைய பெயரிலேயே பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாநகர காவல் துறையை சந்தித்து கடந்த ஏப்ரல் 20-ந்தேதி அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.

ஆனால் அதை எதிர்த்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என்று அவரது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது.

அவர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் அவரை இதுவரை கைது செய்யவில்லை. போலீஸ் பாதுகாவலுடன் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட்டு இருக்கிறார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.

ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. சபையில் இதுபற்றி பிரச்சினை கிளப்பியபோது இது நீதிமன்ற நடைமுறையில் இருப்பதாக கூறி சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்