நடராசன் இறப்புக்கு தொல் திருமாவளவன் இரங்கல்

Default Image

திருமதி சசிகலா அம்மையாரின் கணவரும் தீவிரத் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தஞ்சையில் “முள்ளிவாய்க்கால் முற்றம்” அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான தமிழ்த்திரு ம. நடராசன் அவர்கள் 20.03.2018 இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் காலமானார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர், மிக விரைவாக உடல்நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அண்மையில் திடீரென அவர் மீண்டும் உடல்நலிவுற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். எனினும், சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் மஞ்சள்காமாலைத் தொற்றிலிருந்து அவரால் மீளமுடியாமல் இன்று காலமாகிவிட்டார் என்பது பெரும்வேதனை அளிக்கிறது.

அவர் 1965 ஆம் ஆண்டில் அன்னைத் தமிழ்க்காக்கும் அறப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளில் ஒருவர். பேரறிஞர் அண்ணாவின் மீது கொண்டுள்ள அளவிலாப் பற்றின் வெளிப்பாடாக அவரது பேச்சுக்களையும் எழுத்துகளையும் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளியிட்டவர்.

கட்சிப் பதவிகளிலோ ஆட்சிப் பதவிகளிலோ இல்லாமலும் நேரடியாக அரசியலில் ஈடுபடாமலும் தமிழக அரசியலரங்கை அடிக்கடி அதிரவைத்தவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சிக்காலங்களில் அனைத்துத் தரப்பினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர். அதிமுகவில் திரைக்குப் பின்னிருந்து இயங்கும் அரசியல் சூத்திரதாரி என தன்னைப்பற்றிப் பலரும் பேசும்வகையில் கமுக்கமாய் அரசியல் காய்களை நகர்த்தியவர். ஊடகங்களின் பரபரப்புச் செய்திகளுக்கு அடிக்கடி தீனியளித்தவர். தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் கவனிக்கப்பட்டவர்.

சமூகநீதிக் காவலர் மறைந்த திரு.கன்ஷிராம் அவர்களுக்கு மிக நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தவர். அவரிடம் என்னை வெகுவாக அறிமுகப்படுத்தியவர். கூட்டணி தொடர்பான கருத்து மாறுபாடுகளையெல்லாம் கடந்து தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு செலுத்தியவர்.
சாதியமுரண்பாடுகளால் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நிகழும் போதெல்லாம் தனிப்பட்டமுறையில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உழைக்கும் எளிய மக்களிடையே சமூகநல்லிணக்கத்தைப் பேணவேண்டும் என்கிற அக்கறையையும் வெளிப்படுத்தியவர்.

அவரது இழப்பு என்பது மொழி, இன உரிமைகள் மற்றும் ஈழவிடுதலை ஆகியவற்றுக்கான அரசியல்களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடுகிற குடும்பத்தினருக்கும் உற்றார்உறவினருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த சூழலில் அவரைக் காண்பதற்கு அனுமதி கோரிய திருமதி சசிகலா அம்மையார் அவர்களை விடுப்பில் செல்ல கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும். தற்போது அவரது அடக்கத்தில் பங்கேற்று இறுதிக் கடனாற்றுவதற்கேனும் மனிதாபிமான அடிப்படையில் விடுப்பளிக்க கர்நாடக அரசு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.என தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்