சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ,சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் யாரிடமும் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை காவல்துறையும், தகவல் பாதுகாப்பு கல்வி மையமும் இணைந்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு, இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இணையதளம் மூலமாக நடைபெறும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். செல்போனில் தொடர்பு கொண்டோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். கார்டு விவரங்களைத் தரக்கூடாது என தெரிவித்தார்.
மேலும், மின்னஞ்சல் மூலமாக யாராவது தொடர்பு கொண்டு, வெளிநாட்டு வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மீட்டெடுக்க, உதவக் கோரினால், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், அதுபோல் வரும் எஸ்.எம்.எஸ்.களையும் கண்டுகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். +92, #90, #09, +344 ஆகிய எண்களுடன் தொடங்கும் செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், மிஸ்டுகால் வந்தால் அதற்கு மீண்டும் அழைக்க வேண்டாம் என்றும், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள, தகவல் பாதுகாப்பு கல்வி மையத்தின் 1800-425-6235 என்ற இலவச எண்ணிலோ, isea@edac.in என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் ரத்த தானம் வழங்கும் முகாமை, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். இதில், துணை ஆணையர் சரவணன் உட்பட 200 மேற்பட்ட போலீசார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர்கள் சாரங்கன், ஜெயராமன், சேஷசாயி, இணை ஆணையர்கள் அன்பு, சுதாகர் உள்பட ஏராளமான காவல்துறையினர் பங்கேற்றனர்.