சென்னையில் தொடர் வழிப்பறி, பொதுமக்களை தாக்கி பொருட்களை பறிப்பது, கார், மோட்டார் பைக்குகளை கடத்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதால் இரவு நேரத்தில் காவல் இணை ஆணையர்கள் தலைமையில் ரோந்து செல்ல காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சமீப காலமாக குற்ற நகரமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் ஏற்படும் வகையில் சாலையில் பெண்கள், தனியாக செல்வோர் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. முன்பெல்லாம் வீடு புகுந்து திருடுவது நடக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வழிப்பறி ஏதாவது நடக்கும்.
ஆனால் சமீப காலமாக செயின் பறிப்புகள் அதிகரிக்க தொடங்கின. பல இடங்களில் செயின் பறிப்புகள் நடக்க தொடங்கியது. முன்பெல்லாம் இரவில் அதிகாலையில், கோலம் போடும் பெண்கள், வயதானவர்கள், பால் வாங்க செல்பவர்கள், வாக்கிங் செல்பவர்களாக பார்த்து வழிப்பறி செய்து வந்த கொள்ளையர்கள் பின்னர் தைரியம் பெற்று சாதாரணமாக பகலிலேயே வழிப்பறி செய்தனர்.
உயர் ரக பைக், அதிவேக பைக், திருட்டு வாகனங்களில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸார் வாகன சோதனை நடத்தாததே காரணம். அடுத்து துணிச்சலடைந்த வழிப்பறி கொள்ளையர்கள் கணவருடன் உறவினருடன் சென்ற பெண்கள், வாகனங்களில் கணவருடன் பயணிக்கும் பெண்களிடமும் கைவரிசை காட்டினர்.
இதில் பல பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். லாவண்யா என்ற மென் பொறியாளர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர்பிழைத்தார். கொள்ளைச் சம்பவங்களை தடுக்கச்சென்ற போலீஸாரும் தாக்கப்பட்டனர், கத்திக்குத்துக்கு ஆளானார்கள். செயின் பறிப்பை தொடர்ந்து செல்போன் பறிப்பில் இறங்கிய கொள்ளையர்கள் தினமும் சென்னையில் நூற்றுக்கணக்கானவர்களிடம் கொள்ளை அடித்தனர்.
இதில் நுங்கம்பாக்கத்தில் ஒரு மாணவர் பரிதாபமாக கத்திக்குத்தில் உயிரிழந்தார். செல்போனை பறிக்கும் கும்பலில் அதிக அளவில் இளம் சிறார்கள் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தும் அது குறித்த சமுதாய விழிப்புணர்வற்று இருந்தனர் காவல் அதிகாரிகள்.
இதன் விளைவு ஒரே நாளில் 16 சம்பவங்கள் சென்னை நடந்தது. காரையே பறித்துச் செல்வது, மோட்டார் பைக்கை பறித்துச் செல்லும் சம்பவங்களும் நடந்தது. தைரியமாக கத்தியுடன் மூன்று பேர் வாகனங்களில் பயணித்து வழிப்பறி செய்யும் அளவுக்கு சென்னையின் இரவு நேர ரோந்து இருந்தது.
முன்பெல்லாம் காவல்துறை உயர் அதிகாரிகள் இரவு ரோந்து வருவார்கள், காலப்போக்கில் அது குறைந்ததால் அதற்கு கீழிருக்கும் போலீஸாரும் எனக்கென்ன என்று இருந்ததன் விளைவே சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க காரணமாயின. சென்னையில் ஒரே மாதத்தில் 17 இடங்களில் ஷட்டரை உடைத்து திருடும் அளவுக்கு கொள்ளையர்கள் வலுப்பெற்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சினையை தடுக்க காவல் உயர் அதிகாரிகளே களத்தில் இறங்க வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தினமும் நான்கு காவல் இணை ஆணையர்களில் ஒருவர் நேரடி இரவு ரோந்துப்பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர துணை ஆணையர்களுக்கும் தனிப்பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ள இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஒரு ஷிப்ட்டும் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை ஒரு ஷிப்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக இரவுப் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் தவிர கூடுதலாக காவலர்கள் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பணியில் சட்டம் ஒழுங்கு காவலர்கள், குற்றபிரிவு காவலர்கள், மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் ஈடுபட உள்ளனர். இரவில் மட்டும் 6 காவல் துணை ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஷிப்ட் முறையில் சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் காவல் உதவி ஆணையர் தலைமையில், ஒரு காவல் ஆய்வாளர், மூன்று காவல் உதவி ஆய்வாளர்கள், 6 தலைமைக் காவலர்கள் என 30 காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
இன்று இரவு முதல் தொடங்கும் இந்த தீவிர ரோந்துப்பணி வரும் 30-ம் தேதி வரை நடைபெற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனை வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.
இவர்களின் பணி வாகன சோதனை, வழிப்பறி மற்றும் குற்றச்செயல்களிலில் ஈடுபடுபவர்களை தடுத்து பிடிப்பது, பழைய குற்றவாளிகளை பிடிப்பது, பிடியாணையில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிப்பது, பைக் ரேஸ் செல்பவர்களை பிடிப்பது என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…