தொடங்கியது தீபாவளி முன்பதிவு…!!
தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 20000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11,367 சிறப்பு பேருந்துகள், மற்ற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகள் என 20,567 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும். அதே போன்று பண்டிகை முடிந்து திரும்ப சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு 4,207 பேருந்துகளும், பிற இடங்களுக்கு 7,635 பேருந்துகளும் இயக்கப்படும். போக்குவரத்து ஊழியர்கள் நிச்சயமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்தார்.இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று துவங்கி நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.
இதற்கான கோயம்பேட்டில் 26 முன்பதிவுக் கவுண்டர்கள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா 1 கவுண்டர் இயக்கப்படுகின்றது.கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், அண்ணாநகருக்குப் பதிலாக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், சைதாப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு பதில் கே.கே.நகரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை செல்பவர்கள் கோயம்பேடு மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் ஏறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com