தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பலி..!
தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை அடிக்கடி நடமாடி வருகிறது. மேலும் இந்த யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் தோட்டத்துக்கு காவல் செய்யும் நபர்களை தாக்கியும் வருகிறது.
தேவாரம் மலையடிவாரப் பகுதியில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் கடலை விவசாயம் நடந்து வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள கடலைச்செடிகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வந்தன.
தேவாரத்தை சேர்ந்த சேகர் (வயது62) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு 10 மணி வரை காட்டு பன்றிகளை விரட்டிவிட்டு சேகர் தூங்க சென்று விட்டார். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த மக்னா யானை அங்கிருந்த சேகரை கட்டிலோடு தூக்கி வீசியது.
இதில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று அதிகாலை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு உத்தமபாளையம் வன அதிகாரி, போடி டி.எஸ்.பி. பிரபாகரன், மனோகரன், ஆர்.டி.ஓ. ஆகியோர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.