சென்னையில் கடந்த 29-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், அடுத்தடுத்து வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியை பலப்படுத்தும் முறைகள் குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, கட்சியின் செல்வாக்கை மீட்க மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு குழுக்களை தயார்படுத்த வேண்டும். இளைஞர்களை கட்சியில் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, அந்தந்த பகுதியில் உள்ள முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்த வேண்டும். கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதே முக்கியப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.