தென் மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை!ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை !
இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
இந்திய கடல்சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையின் படி, கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரையிலான கடல்பகுதியில் அலைகள் 11 அடி உயரத்திற்கு மேலாக எழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றமாக காணப்படும் என்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதனால் தென்மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டணம், முட்டம், குளச்சல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், குமரி மாவட்டத்தில் இருந்து 1500 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம், வேம்பார், மணப்பாடு, பெரியதாழை மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை,நேற்றைய எச்சரிக்கையைத் தொடர்ந்து 3 ஆயிரம் நாட்டுப் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன், மண்டபம், வேதாளை, ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 300 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.