தூப்பாக்கி சூடு:எதிரொலி முதல்வர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் எதிரொலியாக சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிக்சூட்டைக் கண்டித்து சென்னையில் கடந்த 3 நாட்களில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம், சாலை மறியல் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட வாய்ப்புள்ளதாக உளவுப்பிரிவு போலீஸார் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.