தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஏன்?முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தூத்துக்குடி சென்று வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அரசு அறிவித்திருந்த நிதியுதவியையும் 52 பேருக்கு அவர் வழங்கினார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தீவைத்து கொளுத்தப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தூத்துக்குடி நிலவரம் குறித்து விளக்கினர். இதனைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தூத்துக்குடி வணிகர் சங்கங்கள், மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதையடுத்து, 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையின் கதவுகள் பூட்டப்பட்டு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி செல்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்ய உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆளுநர் ஆறுதல் கூறுகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.