தூத்துக்குடி மாவட்டத்துக்கு ராம ராஜ்ஜிய ரதம் வருகை!எதிர்ப்பு தெரிவிததாக 7 பேர் கைது..!
தூத்துக்குடி மாவட்டத்துக்கு, தமிழகத்தில் பல்வேறு பகுதிக்கு சென்ற ராம ராஜ்ஜிய ரதம் வியாழக்கிழமை(நேற்று) வந்தது. இதற்கிடையே ரதத்துக்கு எதிர்ப்பு தெரிவிததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த 13 ஆம் தேதி அயோத்தியில் தொடங்கி நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்ற ரதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 20 ஆம் தேதி வந்தது.தொடர்ந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக ராமேசுரம் சென்ற ரத யாத்திரை வியாழக்கிழமை ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், சாயல்குடி, கன்னிராஜபுரம், வேம்பார் வழியாக கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு வந்தது.
பின்னர் குளத்தூர், தருவைகுளம், தூத்துக்குடி சிப்காட் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரி சென்றடைந்தது.இந்நிலையில், தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தந்தை பெரியார் சிலை முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.