தூத்துக்குடி பதற்றமான சூழல்..! நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவுவதால், மேலும் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று காலை வரை 8 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், 27ஆம் தேதி காலை 8 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடியில் கருப்பு உடை அணிந்த கமாண்டோக்கள், அண்ணாநகர், திரேஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர்.
இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவருவதாகவும் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, சிறப்பு கண்காணிப்பு அதிகாரி டேவிதார், தூத்துக்குடியில் சட்டவிரோதமாக யாரும் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்ட 65 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல் கூராய்வு இரண்டாவது நாளாக நடைபெற்றதாகவும், நீதிபதி முன்னிலையில், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, மின்சார வாரியமும் ஸ்டெர்லைட்டுக்கான மின்வினியோகத்தை துண்டித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவசுடன் இணைந்திருங்கள்