தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ விசாரணை:போராடிய மக்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றியாகும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை சிபிஐக்கு மாற்றியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென வற்புறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தார்கள். அதன் ஒரு பகுதியாக மே 22-ந் தேதி நடைபெற்ற பொதுமக்களின் மாபெரும் பேரணியின் போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது. போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஏதுமின்றி அதிரடியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் குண்டு காயங்களோடு மருத்துவமனையில் நீண்ட கால சிகிச்சை பெற்று வந்தனர். பலருக்கு உடல் ஊனம் ஏற்பட்டு இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து 28.5.2018 அன்று முறையான விசாரணை நடத்தி குற்றமிழைத்த போலீசார் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வற்புறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய புலனாய்வுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டது. சிலைக்கடத்தல் வழக்கு உட்பட பல வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிற தமிழக அரசு, 13 பேர் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முன்வராதது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்  கே.எஸ். அர்ச்சுணன் மூலம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை நீதியரசர்கள் சி.டி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் விசாரித்து தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார்கள். இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை கடுமையாக கண்டித்ததுடன், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இது போராடிய மக்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றியாகும்.
உடனடியாக சிபிஐ இந்த விசாரணையை மேற்கொண்டு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவர்களை வழக்கு விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லன், இ. சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்