தூத்துக்குடி துப்பாக்கி சூடு:சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அதிர்ச்சி தகவல்!130 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது!

Default Image

சுமார் 130 தோட்டாக்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது  வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் தெரிவ வந்துள்ளது

கடந்த மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட்  போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு என 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் துப்பாக்கி சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார்.

சி.பி.சி.ஐ.டி போலீசாரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 2 நாட்களாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.,க்களிடம் பல்வேறு கட்ட கலந்தாய்வில் ஈடுபட்டார்.

விசாரணையின்போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குறித்த முழு விவ‌ரப் பட்டியல், காயமடைந்தவர் பட்டியல், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களின் பட்டியல், தீ வைத்து எரிக்கப்பட்ட மற்றும் கல்வீசி சேதத்திற்குள்ளான வாகனங்கள் எத்தனை, அவற்றின் உரிமையாளர் யார்? என்பது தொடர்பான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அரசு தரப்பு வக்கீலிடம் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் தூத்துக்குடிக்கு திரும்பி வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ கூறப்படுகிறது.  சம்பவ இடத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆய்வு செய்து சில தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாவட்ட போலீசார் ஒப்படைக்கவில்லை.

அவற்றை பெறுவதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவற்றை பெற்ற பின்னர் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உண்மை கண்டறியும் சோதனை நடத்துகின்றனர். அதில் தான் போலீசார் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளனரா? என்பது தெளிவாகும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்