தூத்துக்குடி துப்பாக்கி சூடு:மீண்டும் நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வருகிறார்!
ஓய்வு பெற்ற நீதிபதி நீதிபதி அருணாஜெகதீசன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்த மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார்
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தங்களின் விசாரணை அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணாஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சம்பவம் தொடர்பாக தைரியமாக வந்து ஆணையம் முன்பு விளக்கவும், பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். இதற்காக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள அரசின் பழைய சுற்றுலா மாளிகையில் ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாண்டு ரங்கன் தலைமையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரும், காயமடைந்தவர்களும் தனித்தனியாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து வருகிறார்கள். கலவரத்தின் சேதமான வாகன உரிமையாளர்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர்.
சிலர் வக்கீல்கள் உதவியுடன் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்கின்றனர். பிரமாண பத்திரங்கள் தாக்கல் முடிவடைந்ததும் அவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதைதொடர்ந்து அடுத்த மாதம் முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக முகாம் அலுவலகத்தில் கோர்ட்டு அறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் நின்று சாட்சியும் அளிப்பதற்காக பிரத்யேகமாக விசாரணை கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதால் விசாரணையும் ரகசியமாகவே நடைபெறும் என தெரிகிறது. இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார்.
அவர் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது. 2 மாதம்வரை விசாரணை நடைபெறும் எனவும், அதன்பிறகு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது