தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை..! மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்துங்கள்..!!உயர் நீதிமன்றம்..!
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்க செல்லும் வழக்கறிஞர்களை தடுக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் பணி செய்ய தடை விதிக்க வேண்டும். பலியானவர்கள் உடலை தனியார் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என்ற கோரிக்கைகளை வைத்தனர்.இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் ரவீந்தரன், வேல்முருகன் ஆகியோர் இன்று மதியம் விசாரித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதிட்டார்.100 நாட்களாக போராட்டத்தை வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுடப்பட்டுள்ளனர். மிருகங்களை வேட்டையாடுவதை போல நடந்துள்ளனர். முழங்காலுக்கு கீழாக சுடவேண்டிய விதிகள் பின்பற்றபடவில்லை. இன்று கூட அண்ணா நகரில் ஒருவர் பலி என தகவல் வந்துள்ளது. போராட்டம் குறித்து முன்னரே அறிவித்தும், அனுமதியும் வழங்கவில்லை.
பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. டாட்டா நிறுவனத்தின் நானோ காருக்காக நிலம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் விவசாயிகள் போராட்டத்தில் இதேபோல தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டதுபோல, மாவட்ட நீதிபதி குழுவை அமைக்க வேண்டும்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்து பேசியதாவது:
மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களோடுதான் அரசும் உள்ளது. ஆனால் மனுவில் இல்லாத தகவல்களையெல்லாம் வாதங்களாக முன் வைக்கிறார்கள். விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என்றார்.
நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் கண்டனம்….
வழக்கு கோரிக்கை, அரசின் வாதம் என அனைத்தும் சட்டத்திற்குட்பட்டுதான் இருக்கவேண்டும். நீதிமன்றத்துக்குள் அரசியலை கொண்டு வராதீர்கள். அரசியலை கேட்க இங்கே வரவில்லை. நாங்கள் இங்கே உட்கார்ந்தால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம். நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதும் தெரியாமல் இங்கே உட்காருகிறோம் என நினைக்க வேண்டாம். என நீதிபதிகள் தெரிவித்தனர். நாங்கள் அரசை குற்றம் சாட்டவில்லை. அந்த நோக்குடன் நாங்கள் வரவில்லை. ஆனால் வழக்கு தொடர்பாக மட்டுமே வாதங்களை முன்வைக்க சொல்கிறோம் என்றனர்.
உடற்கூறு ஆய்வு நடந்து முடியட்டும். மறு உத்தரவு வரும் வரை அவர்களின் உடல்களை பதப்படுத்துங்கள். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் அதன் தன்மையை பொறுத்து மறு ஆய்வு தேவையா இல்லையா என உத்தரவிடுகிறோம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சட்ட உதவிகள் வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும். வழக்கு குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.