தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு..!
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது. 2-வது கட்டமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 3-வதாக இறுதி விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வந்த புகைப்படங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. உறுதிபடுத்தப்பட்ட ஆவணம், வழக்கு தொடர்பான உறுதிபடுத்தப்படாத ஆவணங்களும் சேகரிக்கப்படுகிறது. இதற்காக சம்பவம் நடந்த ஒவ்வொரு இடத்திலும் போலீசார் மீண்டும், மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்தவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.க்கள் சேகரித்த விவரங்களை அவர் கேட்டறிகிறார். தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளார்.