தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தி.மு.க. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு!சி.பி.ஐ. விசாரணை வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்த முற்பட்டார். அப்போது பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அவையில் விவாதிப்பது மரபல்ல எனவும் எடுத்துரைத்தார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேச ஸ்டாலின் முயன்றதால் சபாநாயகர் தனபால், அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் வெளியே வந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தூத்துக்குடியில் அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டினார்.
எனவே, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட போவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.