மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரிடம் பேசினார், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கி சூடு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது.
வன்முறையில் ஈடுபட்டவர்களை சுட்டோம் என்று போலீசார் கூறுவதை நம்ப முடியவில்லை.அதுபோன்று வன்முறை நடந்து இருந்தால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை படிப்படியாக பின்பற்றி இருப்பார்கள். ஆனால் இங்கு நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி குண்டு பெரும்பாலும் வயிற்றிலும், அதற்கு மேலேயும் பட்டு உள்ளது. இது கலவரத்தை கட்டுப்படுத்தும் முறை அல்ல. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது.
துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் போது, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அங்கு இல்லாதது வினோதமானது. இதனால் கீழ்நிலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு உள்ளார்கள். இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அல்லது ஐகோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தூத்துக்குடியில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக போலீசை குறைக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டு உள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயம், நிலத்தடி நீர், மக்களுக்கான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டரீதியாக நிலைத்து நிற்காது. அதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.